புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ஆண்டாள் கிளியுடன் காட்சியளித்த திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்
By DIN | Published On : 16th October 2021 03:02 PM | Last Updated : 16th October 2021 03:03 PM | அ+அ அ- |

ஆண்டாள் கிளியுடன் காட்சியளிக்கும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் திரண்டு வந்து சீனிவாச பெருமாளை சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 4 வாரங்களாக தமிழக அரசு உத்தரவு படி புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலை இருந்தது. அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று பூஜைகளை நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாலை 3 மணி முதலே சுப்ரபாதம் பூஜையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க- மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்; குணமடைந்து வருகிறார்: எய்ம்ஸ்
அதிக அளவு கூட்டம் வந்ததால் டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக மலைக்கோவிலில் மருத்துவ குழுவினரும் இருந்தனர். புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கைகளிலுள்ள கிளிகள் சீனிவாச பெருமாளுக்கு மார்புப்பகுதியில் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.