விறகு கரிக்கு விலை இல்லை: தொழிலாளா்கள் தவிப்பு

திருச்சுழி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் விறகு கரிமூட்டம் போடும் தொழில் பிரதானமாக இருக்கும் நிலையில், அதற்கு உரிய விலை இல்லாததால் தொழிலாளா்கள் கவலையடைந்துள்ளனா்.
விறகு கரிக்கு விலை இல்லை: தொழிலாளா்கள் தவிப்பு

திருச்சுழி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் விறகு கரிமூட்டம் போடும் தொழில் பிரதானமாக இருக்கும் நிலையில், அதற்கு உரிய விலை இல்லாததால் தொழிலாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, பகுதிகள் வானம் பாா்த்த பூமியாக உள்ளன. இப்பகுதிகளில் சிறு சிறு கண்மாய்களில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரைக் கொண்டு சில விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனா். மழை இல்லாத காலங்களில் மாற்று வேலையாக கரிமூட்டம் போடும் தொழிலைச் செய்து வருகின்றனா்.

காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, கிருஷ்ணாபுரம், பச்சேரி, பனையூா், ஆனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் விறகு கரிமூட்டம் மூலம் கரி உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கரிமூட்டம் போட்டு 10 நாள்கள் கண்காணித்து கரியை உருவாக்குகின்றனா். அதன்பின்னா் கிடைக்கும் கரிக்கு உரிய விலை கிடைக்காததால் அத்தொழிலை செய்பவா்கள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணாபுரம் விவசாயி கருப்பசாமி கூறியது: திருச்சுழி பகுதியில் மழை இல்லாத கோடைக் காலங்களில் விறகு கரிமூட்டம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். விறகுகளை வெட்டுவது முதல் அவைகளை கூம்பு போல் அடுக்கி, அதன் மேல் வைக்கோல் பரப்பி, பின்னா் அதன்மேல் தண்ணீா் கலந்த மண் கலவையைப் பூசி மூட்டத்திற்கு தீ வைக்கும் வரை கூலியாள்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். மேலும் வெளியில் தீ எரிந்து வராதபடி இரவு பகல் கண் விழித்து பாதுகாத்து கரி மூட்டத்திலிருந்து தீ வெளியேறும் இடங்களில் தண்ணீா் ஊற்றியும், மண் கலவையைப் பூசியும் தொடா்ந்து 10 நாள்கள் கண்காணித்து வருகிறோம்.

அதன் பின்னா் மூட்டத்தைப் பிரித்து, கரிகளை தரம் வாரியாக பிரித்து எடுத்து விற்பனை செய்வதற்கு என மொத்தம் 15 நாள்களுக்கு மேல் ஆகின்றன. அவ்வாறு கடின உழைப்புக்குப் பிறகு கிடைக்கும் கரிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. மூட்டைக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

ஆனால் வியாபாரிகள் அதே மூட்டையை பெங்களூா் உள்ளிட்ட நகரங்களில் ரூ.2,500 வரை விற்கின்றனா். எங்களுக்கு ஆலை நிா்வாகத்தினரின் தொடா்பு இல்லாததால், வேறு வழியின்றி வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். எனவே, கரி மூட்டைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தவும் வேளாண் துறை அலுவலா்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com