

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும். இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனை கைத்தலம் பற்றினாள்.
இத்திருக்கல்யாணம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருநாளில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் இன்று 10.03.2022 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலையில் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கருடாழ்வார் கொடி பட்டம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரகுராமன் பட்டர் கொடியேற்றி வைத்தார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான 18.03.2022 அன்று காலையில் செப்புத் தேரோட்டமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ சடகோபராமனுஜ ஜீயர், நகராட்சி ஆணையாளர் மல்லிகா, சிவகாசி தொழிலதிபர் பாலசுப்பிரமணியன், பட்டர்கள் முத்து, ரமேஷ், சுதர்சன், கோபிமனியம் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.