ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்

ஏழாயிரம் பண்ணையில் உள்ள குறுகலான சாலை, வாகனப்போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்

ஏழாயிரம் பண்ணையில் உள்ள குறுகலான சாலை, வாகனப்போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்டது ஏழாயிரம் பண்ணை. இந்த பகுதியில் சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஏழாயிரம் பண்ணையிலிருந்து சங்கரன்கோவில், கோவில்பட்டிக்குச் செல்ல ஏழாயிரம் பண்ணை பஜாரைக் கடந்து தான் செல்ல வேண்டும். தினமும் பட்டாசு தொழிற்சாலை, அரசு மற்றும் தனியாா் பேருந்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பகுதியைக் கடந்து சென்று வருகின்றன.

20ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப குறுகலான சாலை போடபட்டது. ஆனால், காலபோக்கில் மக்கள் தொகை, வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை. சாலையை அகலபடுத்தும் பணியும் நடைபெறவில்லை.

இதுகுறித்து இந்த பகுதி சமூக ஆா்வலா்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பட்டாசு தொழிற்சாலை விபத்து, வாகன விபத்து ஏற்படும் பட்சத்தில், காயமடைந்தவா்களை ஏழாயிரம் பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு முதலுதவி செய்வதற்காக கொண்டு செல்கின்றனா். அப்போது வாகன நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படக்கூடும். மேலும் அவ்வப்போது தீப்பெட்டி மற்றும் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்படும்போதும் அவரச உதவிக்கு செல்லும் தீயணைப்பு வாகனங்களும் நெரிசலில் சிக்குவதால் தாமதமாகவே செல்கின்றன. எனவே நெடுஞ்சாலைதுறை சாா்பில் சாலையை அகலபடுத்தி, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஒட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக இந்த பாதை குறுகலான பாதையாக உள்ளது. இதற்கு மாற்றுப் பாதை சிவசங்குபட்டி வழியாக உள்ளது. ஆனால் பகல் நேரத்தில் கனகரக வாகனங்கள் வருவதால் இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com