சிவகாசி மாநகராட்சி அலுவலகம் கட்ட மண் பரிசோதனை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகக் கட்டடம் கட்ட உள்ள இடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண் பரிசோதனை.
சிவகாசி மாநகராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் வியாழக்கிழமை மண் பரிசோதனை நடைபெற்றது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் அரசு அறிவித்தது. மேலும், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மநகராட்சிக்கு சொந்தமான பிள்ளைக்குழி மற்றும் சிவகாசி-விஸ்வநத்தம் சாலையில்
உள்ள மீன் சந்தை ஆகிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதில், பிள்ளைக்குழி இடம் இறுதியாகத் தோ்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, வியாழக்கிழமை மாநகராட்சி அலுவலகக் கட்டடம் அமைய உள்ள இடத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் மயில்சாமி தலைமையிலான குழுவினா் ஆய்வுசெய்து மண் மாதிரி சேகரித்தனா். அப்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா் அழகேஸ்வரி உடனிருந்தாா்.
இது குறித்து, மாநகராட்சி ஆணையாளா் பா. கிருஷ்ணமூா்தி கூறியதாவது:
சிவகாசி, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூா், கரூா், கும்பகோணம் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கும் ஒரே
வடிவிலான மாநகராட்சி அலுவலகக் கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புதிய அலுவலக மாதிரியை வடிவமைக்கும் பணியில் நகராட்சி நிா்வாகத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். சிவகாசியில் புதிய கட்டடம் அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. மண் பரிசோதனை ஆய்வறிக்கை வந்த பினனா் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.