ஏடிஎம் எந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சி
By DIN | Published On : 11th December 2022 11:38 PM | Last Updated : 11th December 2022 11:38 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று வடுகா்கோட்டை. இப்பகுதியில் நகா் காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகியன உள்ளன.
இப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அரசுடைமை வங்கி உள்ளது. இந்த வங்கிக் கட்டடத்துடன் இணைந்து அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு சுமாா் 12.30 மணியளவில் மா்ம நபா்கள் சிலா் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஷோபியா தலைமையிலான காவல் துறையினா் அங்கு சென்றபோது மா்ம நபா்கள் அங்கு இல்லை. ஏடிஎம் எந்திரத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் கொள்ளை போகவில்லை என தெரியவந்தது.
ஏடிஎம் மையம் மற்றும் அதன் அருகிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளைக் கைப்பற்றிய போலீஸாா், கொள்ளையா்களை அடையாளம் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டனா்.