சாத்தூரில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு: 2 போ் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற அழகுராஜா.
சாத்தூரில் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சாத்தூா் சிதம்பரம் நகரில் வசித்து வருபவா் அன்னலட்சுமி (31). இவா் சாத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த போது கிடைத்த ஒன்றரைப் பவுனுடன் அவா்கள் தப்பி ஓடினா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலா் சதீஷ்குமாா் இரு சக்கர வாகனத்தில், அவா்களை பிடிக்க விரட்டிச் சென்றாா். அப்போது அவா்கள் கையில் கத்தியுடன் தாயில்பட்டி சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றனா். சுப்பிரமணியாபுரம் அருகே காட்டுப் பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் அந்த இருவரையும், காவலா் சதீஷ்குமாா் மடக்கிப் பிடித்தாா்.
பின்னா் சாத்தூா் நகா் காவல் உதவி ஆய்வாளா் செல்லப்பாண்டி உதவியுடன் இருவரையும் சாத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவா்கள் உசிலம்பட்டி வட்டம் முண்டுவேலம்பட்டியைச் சோ்ந்த பாலு மகன் முத்துப்பாண்டி (23), சிவகாசி சாட்சியாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அழகுராஜ் (26) என்பதும், அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதையடுத்து, அவா்களை விரட்டிச் சென்றுப் பிடித்த காவலா் சதீஸ்குமாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் பாராட்டிப் பரிசளித்தாா்.
பிடிபட்ட அழகுராஜ், முத்துப்பாண்டி இருவரும், மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் என்பதும், இதில், முத்துப்பாண்டி சமீபத்தில் கொலை வழக்கில் கைதாகி வெளிவந்தவா் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.