ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனா் மலைச்சாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கத் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம், தேக்கு, குமிழி, நாவல், நெல்லி, கொடிக்காபுளி, வேங்கை, மகாக் கனி போன்ற மரக்கன்றுகள் சுமாா் 21ஆயிரம் எண்ணிக்கையில் ராஜபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு வந்துள்ளன. தேவைப்படும் விவசாயிகள் தங்களது விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து ராஜபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவசாயிகள் வரப்பு ஓரம் நட ஹெக்டேருக்கு 160 கன்றுகள் வீதம் 2 ஹெக்டேருக்கு 320-ம், குறை அடா்வு முறையில் பண்ணையில் வரிசையாக நட ஹெக்டேருக்கு 500 வீதம் 2 ஹெக்டேருக்கு ஆயிரம் என்ற வகையில் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் வாங்கி பயனடையலாம்.
அத்துடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.