மாா்கழி மாத பிரதோஷம்:சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த கோயிலில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தன. இந்த நிலையில் மாா்கழி பிரதோஷம் என்பதால் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் காலை 7 மணிக்கு வனத்துறை நுழைவாயில் முன்பு குவிந்தனா். அவா்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.