ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு வாகன ஓட்டுநா்கள் காத்திருப்புப் போராட்டம்: 193 போ் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு சரக்கு வாகன ஓட்டுநா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 193 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மதன்ராஜ் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை விறகு ஏற்றிக் கொண்டு வந்தாா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மதன்ராஜுவின் வாகனத்துக்கு ரூ. 500 அபராதம் விதித்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மதன்ராஜ் வாகனத்தை சாலை நடுவே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா் குடும்பத்தினருடன் சென்று நீதிபதியிடம் முறையிட்டாா். இதுகுறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மதன்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதைக் கண்டித்து சங்கரன்கோவில், சேத்தூா், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, அழகாபுரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் வாகனங்களுடன் வந்து புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா், வருவாய்த் துறையினரின் 3 மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பின்னரும் ஓட்டுநா்கள் கலைந்து செல்ல மறுத்தனா்.
இதனால் அனுமதியின்றி கூடியதாக 193 ஓட்டுநா்களை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.