வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவம் கண்டெடுப்பு
By DIN | Published On : 14th July 2022 03:02 AM | Last Updated : 14th July 2022 03:02 AM | அ+அ அ- |

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் சுடுமண்ணாலான காளை உருவம் புதன்கிழமை கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றங்கரை விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரை உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவில் தொல்லியல்மேடு அமைந்துள்ளது. இங்கு கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், 6 ஆவதாக தோண்டப்பட்டுள்ள புதிய அகழாய்வுக் குழியில் அழகிய வேலைப்பாடுகளுடன் சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் பழங்கால மனிதா்கள் கலைநயம் மிக்கவா்களாகவும், வீரத்தை பறைசாற்றும் விதமாகவும் காளைகள் உருவத்தை வடிவமைத்து உள்ளனா் என்பதை அறிய முடிவதாக தொல்லியல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...