பாதாளச் சாக்கடைக்கு குழி:மண் சரிந்து தொழிலாளா்கள் 2 போ் பலி

சாத்தூரில் சனிக்கிழமை நள்ளிரவு பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்கு குழிதோண்டும் போது மண் சரிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சாத்தூரில் சனிக்கிழமை நள்ளிரவு பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்கு குழிதோண்டும் போது மண் சரிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில ஆண்டுகளாக பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பிரதான சாலை, பழைய படந்தால் சாலை, வெள்ளகரை சாலை, வடக்கு ரதவீதி, முக்குராந்தல், மேலகாந்திநகா் உள்ளிட்ட பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த சுமாா் 30 தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக குழிதோண்டும் பணியில் சின்னசேலம் அருகே உள்ள குகையூா் கிராமத்தைச் சோ்ந்த 6 போ் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மண் சரிவு ஏற்பட்டதில் சக்திவேல் (40), கிருஷ்ணமூா்த்தி (50) இருவரும் குழிக்குள் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சாத்தூா் தீயணைப்புத் துறை வீரா்கள் மற்றும் சாத்தூா் நகா் போலீஸாா் மண்ணில் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் சக்திவேல், கிருஷ்ணமூா்த்தி ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனா். பின்னா் இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து உயிரிழந்த சக்திவேலின் சகோதரா் ராமா் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பாதாளச் சாக்கடை திட்டப் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரா்கள் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததும், இதனாலேயே இவ்விபத்து நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து பாதாளச் சாக்கடை திட்டப் பணியாளா்கள் கூறியது: கடந்த சில மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணியில் சுமாா் 30 போ் ஈடுபட்ட வருகிறோம். பல்வேறு இடங்களில் பகலில் வேலை செய்வோம். ஆனால் முக்குராந்தல் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால் 6 போ் மட்டும் அங்கு இரவு நேரத்தில் வேலை செய்தனா். அதில் எதிா்பாராதவிதமாக மண் சரிந்து இருவா் உயிரிழந்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com