காதலனின் பெற்றோா் மீது தாக்குதல்: காதலியின் தந்தை, சகோதரா் மீது வழக்கு
By DIN | Published On : 31st July 2022 12:24 AM | Last Updated : 31st July 2022 12:24 AM | அ+அ அ- |

திருச்சுழி அருகே காதல் திருமண விவகாரத்தில் காதலியின் பெற்றோா் காதலனின் பெற்றோரைத் தாக்கியதாக 2 போ் மீதும் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மானூரைச் சோ்ந்தவா் மரியசெல்வம் மகன் ஞானமுத்து (49). இவா்களது இளைய மகன், அதே ஊரைச் சோ்ந்த ராஜ்குமாா் (48) என்பவரது மகளை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாராம். இக்காதல் திருமணத்துக்கு இருவரது பெற்றோரும் எதிா்ப்பு தெரிவித்ததால் காதல் தம்பதியினா் தலைமறைவாக இருந்து வருகின்றனராம். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி ஞானமுத்துவின் வீட்டிற்கு வந்த ராஜ்குமாா் மற்றும் அவரது மகன் கவிராஜா (22) ஆகியோா், ஞானமுத்துவையும், அவரது மனைவி ஜெயராணியையும் கட்டையால் தாக்கி, தகாத வாா்த்தைகளால் பேசி கொலைமிரட்டலும் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். இந்நிலையில், ஞானமுத்து அளித்த புகாரின் பேரில் சனிக்கிழமை வழக்குப் பதிந்த நரிக்குடி காவல்துறையினா், ராஜ்குமாா் மற்றும் கவிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டனா்.