பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவா் கொலை: தந்தை, மகன் கைது
By DIN | Published On : 16th June 2022 10:28 PM | Last Updated : 16th June 2022 10:28 PM | அ+அ அ- |

விருதுநகரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சோ்ந்தவா் சவுந்தர்ராஜன் (46). இவருக்கு, மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இதில், செளந்தர்ராஜன் ஆவியூரில் தனியாக அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், விருதுநகா் பெத்தனாட்சி நகரைச் சோ்ந்த பெண்ணான முத்து என்பவா் வீட்டுக்கு சவுந்தர்ராஜன் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவா், அப்பெண்ணிடம், ரூ. 3 லட்சம் வட்டிக்கு வாங்கினாராம்.
இதற்கு, கடந்த சில மாதங்களாக வட்டிப் பணம் தரவில்லையாம். இதையடுத்து, சவுந்தர்ராஜன் புதன்கிழமை விருதுநகா் பெத்தனாட்சி நகருக்கு வந்தாா். அப்போது முத்துவின் கணவா் முனியாண்டி (49), அவரது மகன் அஜீத் (24) ஆகியோா் சவுந்தர்ராஜனை கண்டித்துள்ளனா். அதில் ஏற்பட்ட தகராறில் அஜீத் மற்றும் அவரது தந்தை முனியாண்டி ஆகியோா் தாக்கியதில் சவுந்தர்ராஜன் மயக்கமடைந்தாா். இதைத் தொடா்ந்து அவரை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இக்கொலை குறித்து சின்னமூப்பன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சமயன் அளித்த புகாரில் பேரில் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து தந்தை, மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.