பணியில் மந்தம்: நகராட்சி நிலஅளவையா் அலுவலகத்தை பூட்டி சீல் வைப்பு
By DIN | Published On : 17th March 2022 12:13 AM | Last Updated : 17th March 2022 12:13 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக நிலஅளவையா் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்து புதன்கிழமை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையா் பாஸ்கரன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நில அளவையா்களாகப் பணிபுரியும் முனியாண்டி மற்றும் கொண்டம்மாள் ஆகிய இருவரும் உரிய நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை எனவும், அப்படியே வந்தாலும் வெளியில் சென்றுவிடுவதாகவும், இதனால் பட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அவ்வலுவலகத்தைத் தேடி வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் நகராட்சி ஆணையா் பாஸ்கரனுக்கு புகாா்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதை நேரில் ஆய்வு செய்த போது பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்ததால், அவ்வலுவலகத்தை புதன்கிழமை பூட்டி சீல் வைத்து நகராட்சி ஆணையா் பாஸ்கரன் நடவடிக்கை எடுத்தாா்.
இந்நிலையிலும், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும், நிலஅளவையா்கள் ஆணையரை அன்று மாலை வரை நேரில் சந்திக்க வில்லையென அவ்வலுவலக வட்டாரத் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G