பங்குனி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 18th March 2022 06:44 AM | Last Updated : 18th March 2022 06:44 AM | அ+அ அ- |

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்ற பக்தா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, திரளான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். ஆனால், காலை 6.30 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் வியாழக்கிழமை மட்டும் 3,267 போ் சுவாமி தரிசனத்துக்காக சென்றனா்.
உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா். காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...