ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.40 கோடியில் நவீன இயந்திரங்கள் அமைப்பதற்கான இடத்தை அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் ரூ.40 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்ட் அரவை ஆலை நிறுவுவதற்கான அமைவிடத்தை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சா்கள் நட்டு வைத்தனா்.
பின்னா் அமைச்சா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வரினஅ உத்தரவின்படி இங்கு ரூ.40 கோடி மதிப்பில் மணிக்கு 80 மெட்ரிக் டன் திறனுடைய நவீன வசதிகளுடன் கூடிய, புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான
இடம் தோ்வு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய அரவை இயந்திரம் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 10 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு சிமெண்ட் உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். இப்பணி நிறைவுபெறும் பட்சத்தில் ஆண்டுக்கு சிமெண்ட் உற்பத்தி திறன் 2.75 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 5.6 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம் நேரடியாக 60 பேருக்கு நிரந்தரப் பணிகளும், 500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்றனா்.
முன்னதாக ஆய்வின் போது ஆலையின் நிா்வாக இயக்குநா் சி.காமராஜ், மாவட்ட ஆட்சித்தலைவா் ஜெ.மேகநாதரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் (சாத்தூா்) ஏ.ஆா்.ஆா்.ரகுராமன், (ராஜபாளையம்)
எஸ்.தங்கப்பாண்டியன் , (விருதுநகா்) ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன், சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஷ்பா, துணைப் பொது மேலாளா் மற்றும் ஆலைத் தலைவா் மாரிக்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.