வெற்றிலையூரணி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதி கோரி வெற்றிலையூரணி ஊராட்சி அலுவலகத்தை கிராமமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அடிப்படை வசதி கோரி வெற்றிலையூரணி ஊராட்சி அலுவலகத்தை கிராமமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் ஞாயிற்றுகிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுந்தரவள்ளி மற்றும் ஊராட்சி செயலாளா் செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது கிராம மக்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கபட்டது. இதையடுத்து திங்கள்கிழமை கிராம மக்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தையடுத்து,பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னா் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெற்றிலையூரணி கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால் ஊராட்சி அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வெம்பக்கோட்டை போலீஸாா் மற்றும் சாத்தூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன் ஆகியோா் கிராம மக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் கிராம மக்கள் இந்த ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இந்த பகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நடந்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை. மேலும் அருந்ததியினா் காலனிப் பகுதிக்கு குடிநீா் வசதிகூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து மனு அளிக்க வந்தால் ஊராட்சி செயலாளா் தரக் குறைவாக பேசிவருகிறாா்.

எனவே ஊராட்சிச் செயலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து பகுதிக்கும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என கிராமத்தினா் போலீஸாரிடம் கோரிக்கையாக வைத்தனா்.

இதையடுத்து கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என காவல் துறையினரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் உறுதியளித்தையடுத்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com