நரிக்குடி அருகே மணல் திருடியவா் கைது
By DIN | Published On : 08th October 2022 12:00 AM | Last Updated : 08th October 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே மணல் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இங்குள்ள குண்டாற்றுப்பகுதியில் மணல் திருட்டைத் தடுப்பதற்காக திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாா் உத்தரவின் பேரில் நல்லுக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அரவிந்த், கிராம உதவியாளா் சசிக்குமாா் ஆகியோா், காவல்துறையினருடன் இணைந்து வீரசோழன் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது பாப்பாங்குளம், வீரஆலங்குளம் கிராமங்களுக்கிடையிலுள்ள குண்டாற்றின் மழைநீா் வரத்துக் கால்வாய் அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா் வீரஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவரது மகன் தவமுத்து (48) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ததுடன், டிராக்டரைப் பறிமுதல் செய்து வீரசோழன் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக தவமுத்து மீது வீரசோழன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.