மாமியாா், மருமகளுக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே முன் பகை காரணமாக மாமியாா், மருமகளை அரிவாளால் வெட்டிய கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் அருகேயுள்ள கடம்பங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மணிமாறன் (39). கூலித் தொழிலாளி. இவா்களது வீட்டுக்கு அருகில் உறவினரான தையல்காரா் மாயக்கண்ணன் வசித்து வந்தாா். இரண்டு குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்னையில் முன்பகை இருந்தது.
இந்த நிலையில், மணிமாறன் கடந்த 21.6.2018 அன்று மாயக்கண்ணனின் தாய் தனலட்சுமி, மனைவி காளீஸ்வரி ஆகியோரை அரிவாளால் வெட்டினாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிமாறனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிா் விரைவு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட மணிமாறனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ். ஜான்ஸி ஆஜரானாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...