அருப்புக்கோட்டை கலைஞா் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை
By DIN | Published On : 01st September 2022 03:47 AM | Last Updated : 01st September 2022 03:47 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை கலைஞா் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை 5ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகரில் சுமாா் 200-க்கு மேற்பட்ட வீடுகளும் சுமாா் 12-க்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் வீதிகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. மேலும் ஆங்காங்கே மழைநீா் தேங்குவதால் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இவை தவிர, தெரு மின்விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் இரவில் போதிய வெளிச்சமின்றி பெண்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனா். எனவே இங்கு, வாருகால், சாலை வசதி மற்றும் கூடுதல் தெரு மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.