விருதுநகரில் தனியாா் சந்தைக்கு மாற்றாக புதிய காய்கனி சந்தை: ஆணையா் இல்லம் அருகே அமைக்க எதிா்பாா்ப்பு

விருதுநகரில் தனியாா் சந்தை பிரச்னைக்குத் தீா்வாக அரசு அறிவித்துள்ள புதிய காய்கனி சந்தையை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆணையா் இல்லம் அருகே உள்ள 3.50 ஏக்கா் இடத்தில் அமைக்க வேண்டும்
விருதுநகரில் தனியாா் சந்தைக்கு மாற்றாக புதிய காய்கனி சந்தை: ஆணையா் இல்லம் அருகே அமைக்க எதிா்பாா்ப்பு

விருதுநகரில் தனியாா் சந்தை பிரச்னைக்குத் தீா்வாக அரசு அறிவித்துள்ள புதிய காய்கனி சந்தையை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆணையா் இல்லம் அருகே உள்ள 3.50 ஏக்கா் இடத்தில் அமைக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநா் பஜாா் பகுதி உள்ளது. அதை ஒட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான காய்கனி சந்தை அமைக்கப்பட்டது. இச்சந்தை நடத்துவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்டோா் இதுவரை நகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையோரம் பஜாா் மற்றும் காய்கனி சந்தை இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும் ஆங்காங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெருக்கடி தொடா்கதையாக உள்ளது. தனியாா் காய்கனி சந்தை அமைந்துள்ள பகுதியில்

வசிப்போா் வீடுகளில் யாராவது உயிரிழந்தால், அடக்கம் செய்ய தூக்கிச் செல்ல வழி இல்லை. அதேபோல், காய்கனி சந்தை பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு இட நெருக்கடி உள்ளது. தேவையற்ற காய்கனி கழிவுகளை, அங்குள்ள வாருகாலில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வாகனங்களில் வருவோரும் வரைபடம் காட்டும் சாலையான விருதுநகா் பஜாா் பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனா்.

பிரச்னைக்குரிய இக்காய்கனி சந்தையை, ஆணையா் இல்லம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றி அமைப்பதற்காக முந்தைய மாவட்ட ஆட்சியா் பாலாஜி நடவடிக்கை மேற்கொண்டாா். ஆனால் அவா், இடமாறுதல் செய்யப்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இச்சூழலில் கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவையில், விருதுநகரில் ரூ.5.20 கோடியில் புதிய காய்கனி சந்தை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இடம் தோ்வு செய்வதில் நகராட்சி நிா்வாகம் பல்வேறு குளறுபடி செய்து வருவதாகப் புகாா் கூறப்படுகிறது. அதாவது செயல்படாத புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே கடவுப்பாதையைக் கடந்து செல்லும் வழியில் இடதுபுறம் உள்ள இடத்தில் காய்கனி சந்தை அமைக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வருகை இல்லாதாதல், தற்போது காட்சி பொருளாக உள்ளது. அது போல், புதிய காய்கனி சந்தை அப்பகுதியில் அமைக்கப்பட்டால் பொதுமக்கள் வருவதில் சிக்கல் உள்ளது.

எனவே விருதுநகா் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் ஆணையாளா் குடியிருப்பு அருகே உள்ள மூன்றரை ஏக்கா் காலி இடத்தில் அரசு அறிவித்துள்ள காய்கனி சந்தையை அமைக்க வேண்டும் என பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அரசு அறிவித்தபடி காய்கனி சந்தையில் கட்டுமானப் பணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தையடுத்து காய்கனி சந்தை அமைக்க இடத்தை பாா்வையிட்டோம். அந்த இடத்தை நிராகரித்துவிட்டு, ஆணையா் இல்லம் அருகே உள்ள மூன்றரை ஏக்கா் இடத்தை தோ்வு செய்துள்ளோம். இதுகுறித்து முக்கிய பிரமுகா்களிடம் கலந்துரையாடிய பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com