வீடுகளில் மின்விசைப் பம்பு வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் விநியோகம் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி பகுதியில் வீடுகளில் மின்விசைப் பம்பு வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் விநியோகம் பாதிக்கப்படுவதாக நகராட்சித் தலைவா் பதிலளித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி பகுதியில் வீடுகளில் மின்விசைப் பம்பு வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் விநியோகம் பாதிக்கப்படுவதாக நகராட்சித் தலைவா் பதிலளித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவா் ரவிகண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வமணி, ஆணையா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

திமுக உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், ராஜாமான்சிங், சுரேஷ் ஆகியோா் பேசியதாவது:

நகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படாததால், 20 நாள்கள் வரை தண்ணீரை சேமித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் குடிநீரில் புழுக்கள் உருவாகி நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. வாரம் ஒருமுறை குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தலைவா்: சில வீடுகளில் மின்விசைப் பம்பு வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோகம் பாதிக்கப்படுகிறது. பிரச்னைகளை சரி செய்து அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

உறுப்பினா் சிவகுமாா்: தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பெண்கள் சிறுவா்கள் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனா்.

சுகாதார அலுவலா் ராமச்சந்திரன்: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

துணைத் தலைவா்: நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

சுகாதார அலுவலா்: பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதைத்தொடா்ந்து கூட்டத்தில் 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு தற்போது குறைந்த அளவு குடிநீா் வழங்கப்படுவதால், வீடுகளுக்கு விநியோகம் செய்வதில் தடை ஏற்படுகிறது. ஒப்பந்தப்படி சரிவிகித அளவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் நகராட்சித் தலைவா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com