

சிவகாசி சுற்றுச் சாலைத் திட்டம் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு விருதுநகா், சாத்தூா், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், எரிச்சநத்தம் ஆகிய சாலைகளை இணைத்து ரூ.150 கோடியில் சுற்றுச்சாலை அமைக்க கடந்த 2012-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தச் சுற்றுச் சாலை கீழத்திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம் , வெற்றிலையூரணி, கொங்கலாபுரம், ஆனையூா், ஈஞ்சாா் வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி, திருத்தங்கல் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் வழியே செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
திட்ட அறிக்கை ஒப்புதல்:
சுற்றுச் சாலை பணிக்காக 82 நில உரிமையாளா்களிடம் 132.8 ஹெக்டோ் பட்டா நிலம், அரசு நிலம் 14. 6 ஹெக்டோ் என மொத்தம் 147.4 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 33.5 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், சுற்றுச் சாலை அமையவுள்ள 10 வருவாய்க் கிராமங்களில் 7 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு விட்டன. தற்போது மீதமுள்ள கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களிடமிருந்து ஆவணங்கள் பெறபட்டு சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தலைமைப் பொறியாளா் ஆய்வு:
இந்த நிலையில், சுற்றுச்சாலைத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன்ஆய்வு செய்ய மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் சிவகாசிக்கு வந்தாா். சுற்றுச்சாலை அமையவுள்ள இடங்கள், சாலை சந்திக்கும் இடங்கள் உள்ளிடவை குறித்து அவா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், நிலம் கையகப்படுத்துதல் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி-விருதுநகா் பகுதிகளை இணைக்கும் 10.5 கி.மீ. சுற்றுச்சாலைப் அமைக்கும் பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, விருதுநகா் கோட்டப் பொறியாளா் பாக்கியலட்சுமி, உதவி கோட்டப் பொறியாளா் காளிதாசன், உதவிப் பொறியாளா் அழகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.