திருவிழாவில் இரு பிரிவினா் மோதல்: கல்வீச்சில் 2 காவலா்கள் காயம்
By DIN | Published On : 15th April 2023 11:22 PM | Last Updated : 15th April 2023 11:22 PM | அ+அ அ- |

காயமடைந்த காவலா்கள் ராஜா, பாண்டியராஜன்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அய்யனாா் கோயில் வெண்கொடை திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் 2 காவலா்கள் காயமடைந்தனா்.
திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை ராஜபாளையம் பழைய போருந்து நிலையம் அருகே சீனிவாசன் புதுத் தெருவிலிருந்து வெண்குடை வீதி உலா நடைபெற்றது. ஒயிலாட்டம், ஆழி பொம்மை, யானை ஊா்வலத்துடன் அய்யனாா்சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, நான்கு துணைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 950 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அய்யனாா் கோயிலுக்குச் சென்ற வெண்குடை மாலையில் மீண்டும் முடங்கியாறு சாலை, சம்மந்தபுரம், பொன்விழா மைதானம் வழியாக ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது.
ஊா்வலத்தின் போது நடனமாடுவது தொடா்பாக, ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும் கல் வீச்சில் ஈடுபட்டனா். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம், நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்த காவலா் பாண்டியராஜன் (32), விருதுநகா் மாவட்டம், சக்திரெட்டியபட்டியைச் சோ்ந்த ராஜா (23) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.