ரயில்வே மேம்பாலப் பணி:சாட்சியாபுரம் பகுதியில் மாற்றுப் பாதைக்கு திட்ட வரைவு அறிக்கை தயாா்

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்குவதற்கு ஏதுவாக தற்காலிக மாற்றுப் பாதைக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, உ
Updated on
1 min read

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்குவதற்கு ஏதுவாக தற்காலிக மாற்றுப் பாதைக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தெரிவித்தாா்.

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த சில நாள்களுக்கு முன்பு மண் மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு ஏதுவாக, தற்காலிக மாற்றுப்பாதை அமைக்க திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

சாட்சியாபுரம் ரயில்வே கடவுப்பாதை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகளும், சரக்கு வாகனம் உள்ளிட்டவைகளும் சென்று வருகின்றன. மேலும், இந்த கடவுப் பாதை வழியாகத்தான் சாட்சியாபுரம், ஆயுதப் படை மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.

ரயில்வே மேம்பாலப் பணி தொடங்கினால், வாகனங்கள் சென்று வர தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, சிவகாசி-ஸ்ரீவில்லித்தூா் சாலையில் உள்ள இரட்டைப் பாலத்திருந்து, பெரியகுளம் கண்மாய், கட்டளைப்பட்டி வழியாக லட்மியாபுரம் ரயில்வே கடவுப்பாதையைப் பயன்படுத்தி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். சாட்சியாபுரம், ஆயுதப் படை மைதானம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று வர சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆசாரி காலனி வழியாகச் சென்று, செங்குளம் கண்மாய்ப் பகுதியில் தற்காலிக பாதை அமைத்து, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சிவானந்த காலனி தெரு, அண்ணாமலையாா் காலனி சாலை வழியாக சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையை அடைய வேண்டும்.

தற்காலிக மாற்றுப்பாதைக்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. விரைவில், இந்தத் திட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும். இதன் பின்னா் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com