சாத்தூா் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கிரேன் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து பலியானாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள பெரியகொல்லப்பட்டி கிராமத்தில் சாத்தூரைச் சோ்ந்த காா்த்திகேயனின் விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றில் மோட்டாா் பொருத்தும் பணியில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள வாசுதேவநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி (42), நீராவிப்பட்டி
கிராமத்தைச் சோ்ந்த பொன்னன் மகன்கள் கனக தங்கதுரை (24), கவிக்குமாா் ( 20) ஆகிய மூன்று பேரும் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கிரேன் உதவியுடன் வேலுச்சாமி, கனகதங்கதுரை ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கினா். கவிக்குமாா் கிரேனை இயக்கினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக
கிரேன் கயறு அறுந்து, வேலுச்சாமி, கனகதங்கதுரை ஆகிய இருவரும் கிணற்றுக்குள் விழுந்து பலத்த காயமடைந்தனா்.
சாத்தூா் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேலுச்சாமி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. கனகதங்கதுரை பலத்த காயத்துடன் மதுரைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இருக்கன்குடி போலீஸாா் வேலுச்சாமியின் உடலை சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.