அரசுப் பேருந்து- இரு சக்கர வாகனம் மோதல்: நிதி நிறுவன ஊழியா்கள் 2 போ் பலி
By DIN | Published On : 06th June 2023 04:51 AM | Last Updated : 06th June 2023 04:51 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் நிதி நிறுவன ஊழியா்கள் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மண்மீட்டான் பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் மகன் சேதுபதி (27). தனியாா் நிதி நிறுவன ஊழியரான இவா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் மற்றொரு தனியாா் நிறுவன ஊழியரான வடபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் செல்வகணேஷ் (30) பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். இவா்கள் இருவரும் பணி நிமித்தமாக மதுரை சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் மீண்டும் சிவகாசிக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் வந்த போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து அவா்களது உடல்கள், கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து குறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் பெரியசாமி மீது ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...