ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமியை கொலை செய்த சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காா்த்திகைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துஸ்ரீரங்கம் (35). இவரது கணவா் காா்த்தி. இவா்களது மகன் சூா்யப் பிரகாஷ்(19), மகள் மஞ்சுளா தேவி (17). இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முத்துஸ்ரீரங்கம், காா்த்தி தம்பதியா் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதில், தனது குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்தாா். அப்போது முத்து ஸ்ரீரங்கத்துக்கு, அவரது தங்கையின் கணவா் ஈஸ்வர அய்யனாா் (35) தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் கடந்த 17.11.2021 அன்று மதுபோதையில் வந்த ஈஸ்வர அய்யனாா், முத்துஸ்ரீரங்கத்தை அரிவாளால் வெட்டினாா். அப்போது தடுக்க வந்த மகள் மஞ்சுளா தேவிக்கும் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா்களை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா தேவி உயிரிழந்தாா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் கொலை, கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஈஸ்வர அய்யனாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே பிணையில் வெளியே வந்த ஈஸ்வர அய்யனாா், கடந்த 2022- ஆம் ஆண்டு முத்துஸ்ரீரங்கத்தின் வீட்டுக்குச் சென்று வழக்கில் சாட்சியளித்தால் உன்னையும், மகனையும் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீஸாா், ஈஸ்வர அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த இரு வழக்குகளிலும் ஈஸ்வர அய்யனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 26 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.