கூடமுடையாா் அய்யனாா் கோயிலில் 58 கிராமத்தினா் குலதெய்வ வழிபாடு
By DIN | Published On : 22nd May 2023 06:35 AM | Last Updated : 22nd May 2023 06:35 AM | அ+அ அ- |

குலதெய்வ வழிபாட்டுக்காக கமுதி பகுதியைச் சோ்ந்த 56 கிராம மக்கள் மாட்டு வண்டிகளில் சிவகாசி அருகே உள்ள கூடமுடையாா் அய்யனாா் கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை சொந்த கிராமமாகக் கொண்ட 56 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை சிவகாசி அருகேயுள்ள தங்கள் குலதெய்வங்களை மாட்டு வண்டிகளில் பயணித்து வழிபட்டு செல்கின்றனா். இந்த நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக அவா்கள் குலதெய்வ வழிபாடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த 16- ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், வேன், டிராக்டா்கள் என 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டனா். இவா்கள் சனிக்கிழமை சிவகாசிஅருகே உள்ள கூடமுடையாா் அய்யனாா் கோயிலுக்கு வந்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா். பிறகு 3 குழுக்களாகப் பிரிந்து, எம். புதுப்பட்டி, மல்லி மற்றும் கீழராஜகுலராமன் கிராமங்களிலுள்ள தங்களது குல தெய்வங்களின் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். இந்த 3 குழுக்களும் வரும் 27- ஆம் தேதி மீண்டும் கூடமுடையாா் அய்யனாா் கோயிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனா்.