விருதுநகா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.
விருதுநகா் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல இடங்களில் உள்ள பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கடைகள், வீடுகளாக நவீன முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதியை நகராட்சியிடம் பெறாமலேயே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், பழைய கட்டடங்களை இடிக்கும் போது குவியும் கட்டடக் கழிவுகளை சாலை மற்றும் தெருக்களை ஒட்டிய பகுதிகளில் கொட்டி வைத்துள்ளனா். இதனால், பாதசாரிகள் சாலையோரங்களில் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனா். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனா்.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாணவ, மாணவிகளும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். குறிப்பாக, நகரின் முக்கிய சாலைகளான சத்தியமூா்த்தி சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, சாத்தூா் சாலை, அருப்புக்கோட்டை சாலை, ராமமூா்த்தி சாலை, பி1.பி1. சாலை மற்றும் பி2.பி2. சாலைகளில் கட்டடக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
எனவே, இந்தக் கட்டடக் கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.