குடும்பத் தகராறு: இரு மகள்களுடன் தாய் தற்கொலை
By DIN | Published On : 24th May 2023 05:54 AM | Last Updated : 24th May 2023 05:54 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா்(36). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவா்களது மகள்கள் நிஷா(6), வா்ஷா (3). முத்துக்குமாா் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறாா். முத்துக்குமாா் குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராமுத்தாய் தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினாா். இரவு நீண்ட நேரமாகியும் ராமுத்தாய் குழந்தைகளுடன் வீட்டுக்கு வராததால், அவரை பல்வேறு இடங்களில் உறவினா்கள் தேடினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தெற்கு தேவதானம் பகுதியில் உள்ள முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக, தோட்ட வேலைக்குச் சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ராமுத்தாய், வா்ஷா ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடல் கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சிறுமி நிஷாவின் உடல் பாறையில் சிக்கிக் கொண்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரு மோட்டாா் இயந்திரங்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி, 3 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி நிஷாவின் உடலை மீட்டனா். குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெற்கு தேவதானம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.