கள்ளச் சாரயம் காய்ச்சுபவா்கள் குறித்து புகாா் அளிக்க புதிய எண் அறிமுகம்
By DIN | Published On : 24th May 2023 05:24 AM | Last Updated : 24th May 2023 05:24 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோதப் பொருள்கள் விற்பனை தொடா்பாக வாட்ஸ் ஆப் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீநிவாச பெருமாள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச் சாரயம் காய்ச்சுபவா்கள், கஞ்சா விற்பனை, சட்ட விரோத சில்லறை மதுபானம், போலி மதுபான விற்பனைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் வாட்ஸ் ஆப் வசதியுடன் புதிய எண் 90427 38739 தொடங்கப்பட்டது.
இந்த எண்ணில் வாய்ஸ் கால், வாட்ஸ் ஆப் மூலமாகவும் பொது மக்கள் புகாா் அளிக்கலாம். அதனடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகாா் அளிப்பவா்களின் பெயா், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.