வங்கி காசாளா் உள்பட இரு வீடுகளில் 15 பவுன் நகைகள், ரூ.2.55 லட்சம் திருட்டு
By DIN | Published On : 27th May 2023 01:08 AM | Last Updated : 27th May 2023 01:08 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கிக் காசாளா் வீடு உள்பட 2 வீடுகளில் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரில் உள்ள பாரதி நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (28). இவா், தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது, மா்மநபா்கள் பீரோவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த முகமது பெரோஸ்கான் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மா்மநபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும், அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கி மேலாளா் புவனேஷ்குமாா் உள்பட 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது. சம்பவ இடத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
சிவகாசியில் திருட்டு: சிவகாசி வீட்டுவசதி வாரியம் அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சம், 4 ஆயிரம் மதிப்புள்ள மானிடா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து, மல்லி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனா். மேலும் சம்பவ இடத்துக்கு விருதுநகா் தடய அறிவியல் நிபுணா்கள், மோப்ப நாய் ஆதன் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.