ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 27th May 2023 01:07 AM | Last Updated : 27th May 2023 01:07 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
இதை முன்னிட்டு குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாடவீதிகள் வழியாகச் சென்று திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத்தில் அமைந்துள்ள வசந்த உற்சவ மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் எழுந்தருளினா்.
அங்கு, ஆண்டாள் பெயரில் இயற்றப்பட்ட கோதாஸ்துதி பாசுரம் பாடப்பட்டு, ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாா் தெப்பத்தை வலம் வந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வசந்த உற்சவ மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனா்.