

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் மலை அடிவாரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.
மம்சாபுரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. யானை, காட்டுப் பன்றி, மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வருவதால், தோட்டப் பயிா்கள் சேதமடைவதுடன் வனவிலங்குகளும் மின் வேலிகள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்தன.
இந்த நிலையில், வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியே வருவதைத் தடுக்க மலையடிவாரத்தில் விலங்குகளுக்கு அகழிகள், சூரிய மின் வேலிகள் அமைக்கப்பட்டன. மேலும்,
வனப் பகுதியில் விலங்குகளுக்காக குடிநீா் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அவை முறையாக பராமரிக்கப்படாததால், காட்டுப் பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள் பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாகி வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஒற்றைக் காட்டு யானையால் பயிா்கள் சேதமடைவதால், வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், மம்சாபுரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜவகா் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தது. மேலும், 70-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளின் குருத்துகளை அவை பிடுங்கி சாப்பிட்டுள்ளன.
சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.