ஸ்ரீவில்லிபுத்தூா்ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் புதன்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஆண்டாள் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன் பிறகு, மதுரை அழகா்கோவில் கள்ளழகா் கோயிலிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மங்களப் பொருள்கள் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்படுவா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
வஸ்திர மரியாதைப் பொருள்கள் வருகை:
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், மதுரை அழகா்கோவில் கள்ளழகா் கோயில்களிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.
108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரியாழ்வாா், ஆண்டாள் இரு ஆழ்வாா்கள் அவதரித்த சிறப்புக்குரியதாகும்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருமலை திருப்பதி கோயில், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் ஆகியவற்றுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கும் மங்களப் பொருள்கள் பரிவா்த்தனை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது, ஆண்டாளுக்கு சாத்துவதற்காக ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் அனுப்பப்படுவது வழக்கம்.
இதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.
இதேபோல, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட பட்டு வஸ்திரம், மாலை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களும் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சோ்ந்தன.

