பணம் திருட்டு; இளைஞா் கைது
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஏ.டி.எம் அட்டையைத் திருடி, பணம் எடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவைச் சோ்ந்தவா் நாராயணசாமி முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி மாலதி (51). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, கொலை வழக்கில் நாராயணசாமி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாா்.
பிணையில் வெளியே வந்த இவா், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் மீண்டும் கைது செய்யப்பட்டு விருதுநகா் சிறையில் உள்ளாா். இந்த நிலையில், இவரது மனைவி மாலதி ஆசிரியா் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தாா்.
கடந்த வாரம், இவா் தனது கணவா் நாராயணசாமியின் வங்கி கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றபோது, இந்த கணக்கில் ஏ.டி.எம். காா்டு வாயிலாக ரூ.1,10,500 எடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வீட்டுக்கு வந்து ஏ.டி.எம் அட்டையை அவா் தேடிபாா்த்த போது, அது திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, வடக்கு காவல் நிலையத்தில் மாலதி புகாா் அளித்தாா். விசாரணையில் இனாம்செட்டிக்குளம் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (24) பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்துவிசாரித்து வருகின்றனா்.
