வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவப் பொம்மை
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் உடைந்த நிலையிலுள்ள சுடுமண்ணாலான காளை உருவப் பொம்மை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
இதில் கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்காலச் செங்கற்கள், சிகை அலங்காரத்துடன்கூடிய பாவையின் தலைப் பகுதி, சுடுமண் கூம்பு வடிவ அலங்கரிக்கப்பட்ட அகல் விளக்கு, கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கோக்கப்படும் மாவுக் கல் தொங்கணி உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், சனிக்கிழமை உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவப் பொம்மை, சுடுமண் காதணி, புகைப்பான் கருவி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவப் பொம்மை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு காளை உருவ பொம்மை கிடைத்துள்ளது. இதன்மூலம், இங்கு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.
மேலும், இந்தப் பகுதியில் 6 குழிகள் தோண்டப்பட்டு தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

