ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
ராஜபாளையத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள் இங்கிருந்துதான் பேருந்துக்கு காத்திருப்பது வழக்கம். புதிய பேருந்து நிலையம் சுமாா் 1.5 கி.மீ. தொலைவில் சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், பழைய பேருந்து நிலையக் கட்டடத்தை அகற்றிவிட்டு, அங்கு வணிக வளாகம் கட்டவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 2.90 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு பேருந்து நிலையம் மூடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டு 15 மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இன்னும் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால் ஏராளமான பயணிகள் ஒதுங்குவதற்கு இடம்கூட இல்லாமல் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனா்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
