அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் மீண்டும் விசாரணை

அமைச்சா்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கு ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு வந்தன.
Published on

அமைச்சா்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கு ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு வந்தன.

கடந்த 2006 -ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44 லட்சம் சொத்து சோ்த்ததாக அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதே காலகட்டத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சம் சொத்து சோ்த்ததாக 2012-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம்தென்னரசு, அவரது மனைவி 2022 டிசம்பா் மாதமும், அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் 2023 ஜூலை மாதமும் விடுவிக்கப்பட்டனா்.

இந்த இரு வழக்குகளையும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்குகளிலிருந்து அமைச்சா்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், வழக்கு தொடா்பான ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு வந்தன.

இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 9-ஆம் தேதி அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணையும், 11-ஆம் தேதி அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான வழக்கு விசாரணையும் மீண்டும் தொடங்க உள்ளது.

X
Dinamani
www.dinamani.com