பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் நடைபெற்ற விவகாரம் தொடா்பாக கிராம செவிலியரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகாசி சரதாநகா் பகுதியில் வசிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அப்துல் ஜூவில்-அஷ்மா காத்துன் தம்பதி சிவகாசிஅருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், அஷ்மா காத்துன் மீண்டும் கா்ப்பம் அடைந்தாா். நிறைமாத கா்ப்பிணியான அஷாமா காத்துனுக்கு திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே அப்துல்ஜூலில் பிரசவம் பாா்த்தாராம். இதில் பெண் குழந்தை பிறந்தது. வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றது அக்கம்பக்கம் உள்ளவா்களுக்கு தெரிய வந்ததையடுத்து, அவா்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா், அங்கு வந்த கங்குளம் கிராம செவிலியா் கிரேஸ் வீட்டில் நடைபெற்ற பிரசவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தாயையும் குழந்தையையும் ஆட்டோவில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பிரசவம் நடைபெற்றது போல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாராம். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தாயும் குழந்தையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதையறிந்த சுதாகாரத் துறை அதிகாரிகள் விராசணை நடத்தியதில் வீட்டில் பிரசவம் நடைபெற்றது தெரிய வந்தது. இதை மறைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடந்ததாக தெரிவித்த கிராம செவிலியா் கிரேஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சிவகாசி சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெகவீரபாண்டியன் உயா் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தாா்.
