விலங்குகள் வேட்டையைத் தடுக்க ரோந்து பணியை வனத் துறையினா் தீவிரப்படுத்தக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வனப் பகுதியில் வன விலங்குகள் வேட்டையைத் தடுக்க வனத் துறையினா் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வன விலங்குகள் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகளை மா்ம நபா்கள் தொடா்ந்து வேட்டையாடி வருகின்றனா். இவா்கள் மீது வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், சுந்தரராஜபுரம் மலையடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட மா்ம நபா்கள் வைத்த சட்டவிரோத கன்னியில் சிக்கிய கரடியை வனத் துறையினா் மீட்டு, சிகிச்சைக்கு பின் விடுவித்தனா்.
இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த ரங்கா்தீா்த்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு வனத் துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மேலும், மாவூத்து ஆண்டிகுளம் கண்மாய் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிய மா்ம நபா்கள் இறைச்சியை எடுத்துவிட்டு, அதன் முள்களை அதே பகுதியில் விட்டுச் சென்றனா்.
வன விலங்குகள் ஆா்வலா்கள் கோரிக்கை:
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் வன விலங்குகள் வேட்டையைத் தடுக்க வனத் துறையினா் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், வன விலங்குகள் வேட்டையில் ஈடுபடுவோா்கள் மீது கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

