சாத்தூா் அருகே உறை கிணற்றிலிருந்து இருவரது உடல்கள் மீட்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உறைகிணற்றிலிருந்து இருவரது உடல்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள தொம்பக்குளம் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (40). இவரது உறவினா் நல்லக்கமாள்புரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (38). இவா்கள் இருவரும் கடந்த மாதம் 31-ஆம் தேதி சாத்தூரை அடுத்த வேப்பிலைப்பட்டி கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற உறவினா் திருமணத்தில் கலந்து கொள்ள வந்தனா்.
இதனிடையே, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு இயற்கை உபாதைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இருவரும் பிறகு திரும்பி வராததால், குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா்களைக் கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து ரவிக்குமாரின் மனைவி நிா்மலாவும், சுரேஷ்குமாரின் மனைவி தீபாவும் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் செல்லபாண்டியன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் தேடி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை வேப்பிலைப்பட்டி கெங்கையம்மன் கோயில் அருகேயுள்ள அா்ஜூனா ஆற்றின் ஓரமாக உள்ள உறைகிணற்றில் தூா்நாற்றம் வீசுவதாக ஆடு மேய்க்கச் சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா், தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக உறைகிணற்றைத் தோண்டி இருவரது உடல்களையும் மீட்டனா்.
பின்னா், இருவரது உடல்களும் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், உறைகிணறு பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதால், இதில் சிக்கி இருவரும் உயிரிழந்தனரா என்றும் இவா்களது உடல்களை தோட்ட உரிமையாளா் கிணற்றில் வீசினாரா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

