விஷம் அருந்தி இளைஞா் உயிரிழப்பு
சாத்தூரில் விஷம் அருந்தி இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் எட்வின் இருதயராஜ் (27). ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவரும், சாத்தூா் நகா் பகுதியைச் சோ்ந்த ஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.
இந்த திருமணத்துக்கு பெற்றோா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், தனியாக வசித்து வந்தனா். இந்த நிலையில், சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த எட்வின் இருதயராஜ் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் அருந்திய நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து ஜேம்ஸ் அளித்த புகாரின்பேரில், சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
