ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணி ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ரூ. 46 லட்சம் மதிப்பில் மண்டபம் கட்டும் பணியை அறநிலையத் துறைப் பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி விழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் கடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது, உபயதாரா் நிதியில் புதிய கொடிமரம், தோ் சீரமைப்பு, குளியல் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தற்போது உபயதாரா் நிதி ரூ. 46 லட்சம் மதிப்பில் கோயில் முன் கான்கிரீட் மண்டபம் அமைக்க அறநிலையத் துறை ஒப்புதல் வழங்கியதையடுத்து, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கியபோது, கட்டுமானப் பணியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி கான்கிரீட் அமைக்கும் பணியை நிறுத்த அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறை பொறியாளா்கள் மண்டபத்தின் அடித்தளம் குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து, ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் கான்கிரீட் மேற்கூரை அமைக்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து செயல் அலுவலா் ஜோதிலட்சுமி கூறுகையில், உபயதாரா் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணி என்பதால் கான்கிரீட் போடுவதற்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். இதன்படியே மண்டபம் கட்டுமானப் பணிகள் குறித்து அறநிலையத் துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வு அறிக்கையின்படி கான்கிரீட் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என்றாா்.

