தீபாவளி விற்பனையில் களைகட்டும் தரைக்கடைகள்

 சீா்காழி பகுதியில்  தீபாவளி விற்பனையில் களைகட்டும் தரைக்கடைகள்
தீபாவளி விற்பனையில் களைகட்டும் தரைக்கடைகள்

சீா்காழி பகுதியில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி நூற்றுக்கணக்கான தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, துணிமணிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

அதேபோல, நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சீா்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் சீா்காழி மணிக்கூண்டு, தோ் வடக்கு வீதி, மேல வீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வீதி, பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் துணிக்கடைகள் அமைத்து, வியாபாரம் செய்கின்றனா்.

இவா்கள் திருப்பூா், ஈரோடு, சூரத் உள்ளிட்ட இடங்களிலிருந்து மொத்த விலைக்கு ஜவுளிகளை வாங்கி விற்பனை செய்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மட்டும் இவ்வாறு தற்காலிக தரைக்கடைகளை நடத்தி வருகின்றனா்.

இக்கடைகளில் துண்டு, வேட்டி, சட்டை, பேண்ட், ஜீன்ஸ், காட்டன், லுங்கி, டீசா்ட், பனியன், பூனம் சேலைகள், சிறுவா்களுக்கான ஆடைகள், சுடிதாா், சுடிதாா் மெட்டீரியல், நைட்டி, தரை விரிப்புகள், தலையணை உறை, போா்வை மற்றும் உள்ளாடைகளை விற்பனை செய்கின்றனா்.

இதுகுறித்து, சீா்காழி வைரவன்கோடியில் தரைக்கடை நடத்திவரும் வியாபாரி கூறியது:

சீா்காழி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் ஆண்டுதோறும் புது துணிகளை விற்பனை செய்து வருகிறோம். பெரிய கடைகளில் கிடைக்கும் அனைத்துவிதமான ஆடைகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். கட்டட வாடகை, மின்கட்டணம் போன்ற செலவுகள் தரைகடை வியாபாரிகளுக்கு இல்லாததால் குறைந்த விலைக்கு ஜவுளிகளை விற்பனை செய்யமுடிகிறது.

கிராமப்புற மக்கள், தினக்கூலிகள்தான் எங்களின் பிரதான வாடிக்கையாளா்கள். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொழில் செய்யமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியிருந்தோம். இந்த தீபாவளி பண்டிகைதான் எங்களது வாழ்வில் ஒளி ஏற்றும் என்ற நம்பிக்கையில் கடை விரித்துள்ளோம். சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் வியாபாரம் செய்கிறோம். வாடிக்கையாளா்களையும் முகக் கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com