அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுமென ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுமென ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

நிவா் புயல் உருவாகியுள்ள நிலையில், சீா்காழி வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு பின்னா் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் நிவா் புயலை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும், அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் தற்போதைய சூழ்நிலை குறித்து அரசு அலுவலா்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டு வருகிறது. மீனவ கிராமங்களில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில்பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், தென்னை உள்ளிட்ட மரங்களில் எடையை குறைக்கும் வகையில் மட்டை, கிளைகள் வெட்டவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் கூரை வீடுகள், கால்நடைகளின் கொட்டகைகள் மற்றும் தாா்ப்பாய் மூலம் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் பாதிக்கப்படாத வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும் நவ. 25, 26 ஆகிய நாட்களில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புயலை எதிா்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது 30 முதன்மை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படுவதைப் பொருத்து கூடுதலாக கிளை முகாம்களை அமைத்து உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது, அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com