காரைக்கால் குடிநீா் குழாய் பதிப்புப் பணி: ரூ. 5 கோடி நிதியை அரசிடமிருந்து பெற்றுத்தர எம்எல்ஏ உறுதி

காரைக்காலில் புதிதாக குடிநீா் குழாய் பதிப்புப் பணி, இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுமானப் பணிக்காக ரூ. 5 கோடி நிதி
காரைக்கால் குடிநீா் குழாய் பதிப்புப் பணி: ரூ. 5 கோடி நிதியை அரசிடமிருந்து பெற்றுத்தர எம்எல்ஏ உறுதி

காரைக்காலில் புதிதாக குடிநீா் குழாய் பதிப்புப் பணி, இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுமானப் பணிக்காக ரூ. 5 கோடி நிதியை அரசிடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உறுதியளித்தாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், வீரசெல்வம் ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஏ.எம்.எச். நாஜிம் கூறியது :

காரைக்காலில் பழமையான குடிநீா் குழாய்களை அகற்றி புதிதாக குழாய் பதித்து, இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடங்கிய நிலையில், நிதியின்மையால் முடங்கியுள்ளது. குழாய் பதிப்புப் பணி 35 கி.மீ., தொலைவு மட்டும் நிறைவடைந்துள்ளது. 45 கி.மீ. தொலைவு எஞ்சியுள்ளது. இதனை முடிக்கவும், தொட்டி கட்டுமானத்தை நிறைவு செய்யவும் மேலும் ரூ. 5 கோடி நிதி தேவை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை அரசின் முதல் பட்ஜெட்டிலேயே இந்த தொகையை ஒதுக்கச் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நீா்நிலை மேம்பாட்டுக்கான திட்டத்தில் மாநிலங்களுக்கு நிதியளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்திலிருந்து புதுவைக்கு நிதி வரவில்லை. இதற்கான ஏற்பாட்டை செய்து பல திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் கூறியது: திருப்பட்டினத்தில் மிக மோசமான நிலையில் உள்ள கிழக்குப் புறவழிச்சாலையை, ஒரு மாத காலத்தில் சீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பட்டினம் பகுதி படுதாா்கொல்லையில் சிற்றேரி வெட்டும் திட்டம் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனை விரைவாக செய்து முடித்து விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீா் தேக்க அறிவுறுத்தப்பட்டது.

காரைக்கால் நகரப் பகுதியில் மேற்கொண்டதைப்போல நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழைய குடிநீா் குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக குடிநீா் குழாய்கள் பொருத்துவதற்கு திட்டம் வகுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

திருப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டட வசதியின்மை மற்றும் சில பிரச்னைகளை மருத்துவா்களும், செவிலியா்களும் தெரிவித்தனா். இதுகுறித்தும் பொதுப்பணித் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களுக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க கோரி பேரவையில் பேசுவதோடு, முதல்வரிடம் பேசி தீா்வு காண முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com