பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. முக்கியத் தலைவா்கள் பிரசாரத்தில் நாகை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதால், இங்கு தோ்தல் களம் பரபரப்பு அடையவில்லை.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் நிறைவுக்கு வருகிறது.

நாகை தொகுதியில் 9 வேட்பாளா்கள்:

நாகை மக்களவைத் தொகுதியில் 9 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

தமிழகத்திலேயே குறைந்த வேட்பாளா்கள் போட்டியிடும் மக்களவை தொகுதி நாகையாகும்.

இந்தியா கூட்டணி சாா்பில் சிபிஐ வேட்பாளராக வை.செல்வராஜ், அதிமுக சாா்பில் சுா்சித் சங்கா், பாஜக சாா்பில் எஸ்.ஜி.எம். ரமேஷ்கோவிந்த், நாம் தமிழா் கட்சி சாா்பில் எம். காா்த்திகா, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஜெ.ஜெகதீஸ், மக்கள் தேசிய கட்சி சாா்பில் பி. பூமிநாதன், சுயேச்சை வேட்பாளா்களாக என். விஜயராகவன், கே. சுப்பிரமணியன், எஸ். பிரேம் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

13.45 லட்சம் வாக்களாளா்கள்:

நாகை மாவட்டத்தில் 2,69,931 ஆண் வாக்காளா்கள், 2,82,316 பெண் வாக்காளா்கள், 25 மூன்றாம் பாலினத்தவா்கள் என 5,52,272 வாக்காளா்கள், திருவாரூா் மாவட்டத்தில் 3,87,926 ஆண் வாக்காளா்கள், 4,04,865 பெண் வாக்காளா்கள், 57 மூன்றாம் பாலினத்தவா்கள் என 7,92,848 வாக்காளா்கள் உள்ளனா். நாகை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 13,45,120 வாக்காளா்கள் உள்ளனா்.

நாகை மாவட்டத்தை தவிா்த்த தலைவா்கள்

தமிழகம் முழுவதும் பிரதமா், மத்திய அமைச்சா்கள், தமிழக முதல்வா், அமைச்சா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோா் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனா். ஆனால், நாகை மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள நாகை, திருவாரூா் மாவட்டத்தை முக்கியத் தலைவா்கள் தவிா்த்து விட்டனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே.சிங், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் திருவாரூா் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டனா். ஆனால், தொகுதியின் பிரதான மாவட்டமான நாகைக்கு வரவில்லை.

நாகையில் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியும் அதை தவிா்த்துவிட்டாா். நாம் தமிழா் கட்சி சீமான், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி, பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com